வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கண்ணன் .....

காக்கை நிறத்தவனே - எனில்
காதல் சுடர் வளர்த்தவனே
யாக்கை எடுத்தவனே - பெரும்
ஏக்கம் அளித்தவனே
காக்கப் பிறந்தவனே - என்
கண்ணிரண்டாய் ஆனவனே

கண்ணன்....

பூக்கள் கிறங்கிடவே புல்லாங்குழல் இசைப்பானே
பாக்கள் ரசித்திடவே பாத நடனமிடுவானே
பாசை ஏதுமின்றி பார்வையில் ஆசை எழச் செய்வானே
பல கதை பேசி கண்ணுறங்க காற்றாகி காணாது அழ வைப்பானே

கண்ணன்....

ஏழையென்று பாராது மடிமேலே தூக்கி கொஞ்சிக் களிப்பானே
தேளைப்போலே துயர் வந்தால் தேடிவந்து தோள் கொடுப்பானே
நாடி வந்து உதவிக் கேட்போருக்கு நாளும் அருள்வானே
கூடி நின்று குரல் எழுப்பினால் கோபாலன் வருவானே

கண்ணன்.....

ஓடியாடி உடல் தழுவி நாளை எனும் ஆவல் தருவானே
மாலை இருள் சூழ மார்பில் சாய்த்து மஞ்சம் தருவானே
சேவல் கூவி விடியும் பொழுதில் சேலையாகி சேவை புரிவானே
கோவை இதழில் கொத்தும் கிளியாகி முத்தம் சுவைப்பானே

கண்ணன்....

காலம் யாவும் கைவிடாது காலடியில் தஞ்சம் அளிப்பானே
கார்மேகமென உருமாறி இடைவிடாது அன்பைப் பொழிவானே
நிலையற்ற வாழ்வெனினும் மனத்தில் நிலைத்தே நிற்பானே
பிழையேதும் செய்தாலும் அது புரிந்து சிறு பிள்ளையாய் சிரிப்பானே heart


கண்ணன் .....


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக