திங்கள், 18 ஏப்ரல், 2016

கடற்கரை

கடற்கரையில் அமர்ந்து கொண்டு
கடல் பியானோவிலிருந்து எழும் அலைகளை விரல்களால் வாசித்துக் கொண்டிருக்க
கரை ஒதுங்கிய சங்குகளுக்குள் நீ கீதம் ஊற்றிக் கொண்டிருக்கிறாய் ;


சிதையாது மெல்ல ஒன்றன் மேல் ஒன்றாய் சீட்டுக்கட்டென நினைவுகளை அடுக்கிவைக்க
சிறு காற்றென நீ வந்து கலைத்துச் சிரிக்கிறாய் ;


ஞாபகங்களை எண்ண இயலாது எண்ணங்களில் மூழ்கி தொலைந்திருக்க
இது பூஜ்யம் என்றபடி நீ முற்று புள்ளி வைக்கிறாய் ;

உள்ளங்கை ரேகை பாதை எங்கிலும் ஆறெனப் பாய்ந்திருக்க
சற்று உயர்த்தியதும் நீ நீரென ஒழுகி ஒன்றுமில்லை என்கிறாய் ;


இரவின் வட்ட முனையில் இமை மூடாது வெளிச்சமாய் விழித்திருக்க
இருள் முகட்டினில் நீ தூக்கத்தை வெட்டுகிறாய் ;


தள்ளாடும் நீரலையின் மீது துள்ளி விளையாடும் மீனாகையில்
புது வானவில் தூண்டிலாய் நீ வந்தென்னை துடிக்க வைக்கிறாய் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக