சனி, 7 நவம்பர், 2015

** அனுபவ ஆசான் 2 **


சில விசயங்களை என்னால் தூக்கி எறிய இயலவில்லை. வெள்ளை ஆடையில் ஒட்டிக் கொள்ளும் அழுக்கு போன்றது. அது சித்ரவதை செய்தபோதும் அதனை சிரத்தையுடன் சிந்திக்கிறேன். அதற்காக பலரையும் சீறியிருக்கின்றேன்.
இது தொட்டில் பழக்கம் அல்ல இடையில் ஒட்டியதுதான். மனம் ஆலயம் என்றபோதும் அங்கும் நூலாம்படை இருக்கத்தானே செய்யும். அடிக்கடி ஒட்டடை அடித்தாலும் மீண்டும் மீண்டும் வளை பின்னல் எழும். அப்படித்தான் நினைவின் பல் சக்கரத்தில் சிக்குகிறது ஞாபகங்கள்.
எதை நான் மறக்க வேண்டும் நினைக்க கூடாது என்று எண்ணுகிறேனோ அது ஒரு காலத்தில் மறைந்தாலும் முழுவதுமாக நீங்குவதில்லை அது அவ்வப்போது வதைக்காமல் விடுவதில்லை. இதற்கு காரணம் அதுவெல்லாம் மனத்தீங்கான செயல்.
தவறு அற்ற வாழ்க்கையை வாழ முடிவதில்லை. அப்படி வாழ்வதும் பெரும் தவறாகும். சில தவறை உணர்ந்தால் ஒழிய அதை பிறர்க்கு எடுத்து கூற இயலாது. சிலவற்றை நாம் அனுபவமின்றி உணர்ந்து அதற்கு தக நடந்தால் துன்பம் தூக்கிலிடாது. என்ன செய்வது பலவும் எனக்கு அனுபவமாகவே நிகழ்ந்து விடுகிறது.
இடுகாட்டில் எரியும் உடலுக்காக அழுகும் உயிரைப் போல் முடிந்ததை எண்ணியே புலம்பும் பலவீனமான மனதை எப்படி பலப்படுத்தி வேறு எண்ணங்களை உடுத்தி பார்த்தாலும் கடைசியில் அழுதே ஆறுதல் அடையும். அது போதாது என்று மீண்டும் அதே சந்தர்ப்பம் இனி வாய்க்காதா என்று ஏங்கிடும்.
எல்லாம் இருந்தும் அதன் கூட குறையும் இருக்கும். அது அவரவர் மனங்களை பொறுத்து மாறியிருக்கும். கிடைக்காததை பெறவே பெரும் தவம் புரியும் மனதில் எழும் ஆசை புற்றின் நீளத்தை குறைக்கவும் முடியாது. அதனை புதைக்கவும் முடியாது.
ஏன் முடியாது முடியும் அதற்கு தன்னை முழுவதுமாக நம்பினால் போதும் என்றால் முடியும். ஆயினும் தவறியவை தரும் வலியை தாங்கவே அது நேரும். வாழ்வின் பிரதானமாக அனுபவம் ஆட்கொள்ளும் போதெல்லாம் அதை கடிவதில்லை அதற்கு கடிவாளம் இடுவதுமில்லை. அலையும் மனக்குதிரை ஓய்வதுமில்லை ....
மனம் ஒரு கடல் என்பேன்... அதில் நாம் எதைத் தூக்கி எறிந்து மூழ்கடிக்க நினைத்தாலும். அது ஓர் நாள் அலையென நினைவதை கரை சேர்த்துவிடும்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக