சனி, 7 நவம்பர், 2015

கண்ணன் வந்தான் - கண்கள் திறந்தான் ;

கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;


மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ;

பின்னல் ஜடையை பிடித்து இழுத்தான்
யாரென கேட்கும் முன் இதழினை நனைத்தான் ;


கன்னம் சிவக்க வெட்கம் பறித்தான்
காரணம் அறியேன் காவலை மறந்தேன் ;

பின்னிடை பிடித்து தன்னுடன் அனைத்தான்
மாரினில் சாய்த்து மர்மங்கள் அவிழ்த்தான் ;


மெல்லனெ காற்றாய் மேனி படர்ந்தான்
சொல்லொன்னோ சுகம்தனை சொல்லிக் கொடுத்தான் ;

சிறு பிள்ளைபோலே எனை அள்ளி எடுத்தான்
முன்னிரு மலையினில் மூழ்கா முத்தெடுத்தான் ;


எல்லையில்லாது எனைக் கொள்ளை அடித்தான்
ஏனெனக் கேட்காது தானாக கொடுக்க வைத்தான் ;

கலையும் மேகமென மோகம் களைத்தான்
கைகள் பற்றியே கவலை போக்கினான் ;


புல்லாங்குழல் எடுத்து புது ராகம் இசைத்தான்
பொழுதது போகவே நிலவதை மறைத்தான் ;

என் முகம் பார்த்தே ஏதேதோ பேசினான்
மடியினில் சேர்த்து உறங்க வைத்தான்
கண் விழித்து பார்த்தேன் காணாது தவித்தேன்
என் விழி ஓரம் நீர் வர சிரித்தே ரசித்தான் ;


ஒரு துளி விழுந்திட ஓடோடி வந்தான்
ஆறென அழுதிட ஆறுதல் தந்தான்
பாரென நீரது துடைத்து புன்னகை பொழிந்தான்
நீயே என் ராதையென நீங்காது தொடர்ந்தான்


கண்ணன் வந்தான்
கண்கள் திறந்தான் ;
கள்வன் அவனே
தீராக் காதல் தந்தான் ;

மாதவன் வந்தான்
மாலை அணிந்தான் ;
மையல் தந்தே
மாலையில் மாயமாய் மறைந்தான் ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக