சனி, 7 நவம்பர், 2015

கண்ணபிரான் கால்பற்றுகிறது;

துளையெல்லாம் நா துழாவும் கோரப் பற்களாயின் குருதி சுவர் நிழலாய் படிகிறது;
வெறி பற்றிய விழியில் குட்டை பாவாடை அளவறியாது குத்திக்கிழிக்கும் வாளாகும் ஆண்குறி அலறல்களில் அபிசேகம் செய்கிறது;
எட்டி பார்க்கும் மொட்டின் மடு நசுக்கும் நகங்களின் வேகத்தில் வேதனை ஒலி பெண்பால் சுயமறுத்து பேச்சற்று மூர்ச்சையாகிறது;
நம்பிக்கையின் கூடாரங்களில் அம்மண வாசனை பிடிக்கும் மோப்ப நாய்களின் வாயில் ஒழுகும் மதநீரில் கண்ணீர் பிசுபசுப்பு கரைவதில்லை;
சிறகுமுளைக்கா பட்டாம் பூச்சிக் கூடொன்று வெந்நீரில் நூலாவதைபோல் வதை செய்யப்படும் வெற்றறைகளில் ஆடை கண்ணபிரான் கால்பற்றுகிறது;
கற்றுக் கொடுக்கும் பிரம்புகள் அங்கத்தின் மர்மங்களை கழற்றும் அந்தரங்கமாகையில் ஏடுகளின் எழுத்துக்கள் அழுகிறது;
சவங்களைப் புணரும் யுகங்களின் கைரேகைச் சாலையில் எதை போர்த்திக் கொண்டு கழுகின் மாடங்களைக் கடப்பது;
இப்படித்தான் பிஞ்சிலே பழுக்கின்றன யாருக்கும் தெரியாது நம் வீட்டுச் சின்னஞ்சிறு பொம்மைகள்~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக