சனி, 7 நவம்பர், 2015

வெண் தாமரை தாயே

வெண் தாமரை தாயே அருள்வாயே
விண் யாவுமே நீயே நிறைந்தாயே
வீணையின் ஒலி நீயே
மெய் ஞானம் தருவாயே
என் நாவினில் வீற்றிருக்கும் கலை மகளே
நாளெல்லாம் தொழுதேன் நின் பாதம் பணிந்தே ...


பேரெழில் புன்னகை சிந்திடுவாய் - ஒன்றென
பேதமை நீக்கி போதனை செய்திடுவாய்
கூர் விழி பார்வையிலே - நித்தம்
நேர் வழி பாதை காட்டிடுவாய்
நல் ஓசையின் வடிவுடையாள்
மேகமதனை உடுத்த சிறு இடையாள்
தேனழகு மலர் மகளே
நின் தேகமது மென் சுடர் நிலவே...


பேரானந்தம் நெஞ்சம் கொள்கிறதே
நின் பெயர் சொல்லி சிந்தை மகிழ்கிறதே
வேறென்ன யிங்கு எனக்கின்பம்
எந்நேரமும் நின் திருமுகம் காணும் வரம் வேண்டும்
வானமும், வையமும் பெரும் ஏடாகும்
நின் வடிவின் அசைவதுவே அழியா எழுத்தாகும்
நானென ஏதுமில்லை நீயெனத் தந்தாயே
நான்முகன் தந்தையெனில் நீயென் தாயே ....


கோ மகன் நானில்லை ஆயினும் குறையில்லை
நீ மனக் கொலுவினில் வீற்றிருப்பதனால் துயரில்லை
தானென மனப் புண் வந்தபோதும் நிலைப்பதில்லை
தாவிடும் நீராய் பண் இசைப்பது நின் கருணை
ஊன் உயிர் உனையன்றி உருகுதல் வேறொன்றிலில்லை
தானெனும் அகந்தையிடம் தாள் பணிவதில்லை


தந்தனத் தாள லயம் தரும் சுரம் நீயே

சந்தங்களின் சங்கீத சங்கதி சரசுவதியே

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக