சனி, 7 நவம்பர், 2015

** இந்து மதம் மதமற்றது 2 **



கல் மீது எனக்குள் எப்போதுமே ப்ரியம் வற்றுவதே இல்லை. ஒரு காலத்தில் கல்தான் எல்லாமே. அது ஆயுதம் முதல் ஆண்டவன் வரை. ஆனால் இன்று கல் கடவுளாக மட்டுமே இருக்கிறது.

கல் மனம் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான் அது கடவுள். உண்மையும். என்னடா இப்படி சொல்கிறான் என்று எண்ணத் தேவையில்லை. உங்கள் மனதையே கேட்டு பாருங்கள் நமக்கு வெளிச்சம் கொடுப்பினும் எளிதில் உருகும் மெழுகை நேசிப்பதை விட அதைத் தாங்கும் மண்ணுக்கடியில் தூங்கும் கல்லறை மீதே காதல் கொள்கிறோம்.

இதை எளிமையாக விளக்கினால் இளகிய மனதுடையவர்களை காட்டிலும் கல் மனதுடையோரையே நாம் அதிகம் பேசுவது ஏசுவது சிந்திப்பது அவர் மனதில் இடம் பிடிப்பது என எல்லாமே அங்கு அதிகப்படியாய் நிகழும். கல் கடவுளாயிற்றே...

பூமியில் கடும் பஞ்சம் வந்தபோதும் இந்து மதத்தில் கடவுளுக்கு பஞ்சமில்லை. ஆலயம் சென்றால் அய்யோ என்று சுற்றோ சுற்று என்று என்னை பெற்றோர்கள் அழைத்துச் செல்வதை பார்த்து என்னடா கல்லுக்கா இப்படி என்று கடிந்து திட்டியதும். பின்னொரு நாளில் அந்த கல் முன்னே கண்கலங்கி அத்துன்பம் வெகு தூரம் சென்றதும் வேறு உண்மை...

கடவுள் எத்தனை உருவம் கொண்டாலும் கல் என்னவோ ஒன்றுதான். அது நிலத்திற்கு நிலம் மாறுபடினும் அனைத்து அடர் கல்லும் சிலை செய்ய உகந்ததே... இதிலும் சிறந்த கல் என்று ரகங்கள் உண்டு. அதற்குள் சென்றால் ஆராய்ச்சி அதிகப்படும். யாவருக்கும் தெரிந்தது கல் தானே...

சரி இந்த கல்லை வணங்க ஏன் நாளும் கோடிக் கணக்கான மக்கள் அலைகிறார்கள். பல கி.மீ தாண்டி பயணம் கொள்கிறார்கள். எதற்கு மாலை, தீ மிதி, தீ சட்டி, பொங்கல், மாவிளக்கு, மொட்டை, பூஜை, அபிசேகம், பட்டு சாத்துதல், வீதி உலா, சப்பரம், பலி கொடுத்தல் அப்பப்பா...இதுவெல்லாம் எதற்கு? ஏன் ? பதில் சொல்லா கல்லுக்கா குழம்பி இருந்திருக்கிறேன். ஆலயம் சென்றாலே இந்த கேள்விதான் என்னை ஆளும்....

மகிமை என்ற ஒரு சொல் உண்டு. அது இந்த கல்லுக்கு பொருந்துவதுண்டு. தஞ்சை கோவில் நந்தி ஒரே கல்லால் ஆனது. அங்கிருக்கும் சிவலிங்கமும் அப்படி ஒரு காட்சியானது. மிகப் பெரியது. சிறிது காலம் தஞ்சையில் வசித்த நேரம் யாவும் ஆலயம் செல்லாத நாள் மிகக் குறைவு. அந்த ஆலயம் எனக்கு இன்றளவும் இறை பக்தியை நிறையச் செய்வதுண்டு. அது தஞ்சை பெரிய கோவில் அல்லவா...

கல் மிகிமை என்னதானென அதன் மீது லகிக்க அது கடவுளானது எனக்குள். நிறைய பேச ஆரம்பித்தேன் மற்றவரை போலவே. ஆனால் அது பேசவில்லை. நிறைய அழுதேன் அது உடனடியாக கண்ணீர் துடைக்கவில்லை. நிறைய சிரித்தேன் அறிவுரை வழங்கியது. நிறைய கடிந்தேன் என்மீது கோபம் கொள்ளவில்லை. போ என துரத்தினேன் தொடர்ந்து வந்தது. சீ வெறும் கல் என்றேன் கடவுளாகியது...

நம் மனதுக்கு எதுவெல்லாம் உகந்ததோ அதுவாக இக்கல் அமைவதே கடவுளாகக் காரணம். குறை நிறை எதுவாகினும் அதற்கு மறுப்பு கூறாமல் சம்மதம் சமாதானம் தருகிறது. அதனால் தான் கொலைகாரனும், கொள்ளைக்காரனும் ஆலயம் செல்கிறான். எவரிடமும் அது வாக்குவாதம் செய்வதில்லை. பலன் கேட்பதில்லை. நம் பலவீனத்தை சொல்லி பயம் காட்டுவதில்லை. மாறாக இருளிலும், இயலா நிலையிலும் பெரும் துணையாகவும், பேரொளியாகவும் விளங்குகிறது....

கல் எல்லாம் கடவுள் ஆகுமா? அப்படியாயின் காலில் மிதிபடுதல் எங்ஙனம் அதை குறிப்பிடுவது. அதுவும் கடவுள்தான். நமக்கு கைகள் உண்டு ஏனைய ஜீவ ராசிகளுக்கு அது இல்லை. அதற்கு கால்களே கை. அப்படித்தான் நம் பாதங்களும் கைக்கு ஒப்பாகும். அதனால்தான் பாதமிதியும் பகவானை தொழுதலுக்கு சமமாகும். சுருக்கமாக புரியும் படி சொன்னால் சிலர் காலடி பட்ட மண்ணை திருநீராக பூசிக் கொள்கிறோமே அப்படித்தான். ராமன் பாத ரட்சகை நாட்டை ஆண்டதும், கல் பாதம் பட்டு அகலிகை ஆனதும் தொழுவதே....

நாம் பார்ப்பது, தொடுவது, மிதிப்பது, நினைப்பது என கல் யாவும் கடவுளாகிறது. அது இந்து மாதத்தில் மட்டுமே சாத்தியமாகிறது. இது பொய் எனில் ஆலயம் சென்று கேள்~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக