சனி, 7 நவம்பர், 2015

செல்லம்மா

உன்னை நானறியேன்
என்னை நீயறிந்த காதலென்ன சொல்லம்மா
கண்ணை இமை மறப்பதாய் நானிருப்பவன் செல்லம்மா
நீ காணும் யாவிலும் நானிருப்பதென்ன சொல்லம்மா
எங்கும் பொய்மை வீற்றிருக்குதடி செல்லம்மா
என்னில் உண்மை அன்பு வைப்பது ஏன் சொல்லம்மா ...

செல்லம்மா

ஓடும் மேகமாய் என் வாழ்வது போகுதடி செல்லம்மா
அதில் வானமாய் உடன் நீ வருவதென்னடி சொல்லம்மா
வெறும் தேகமிது தீயினில் வேகுமடி செல்லம்மா
வெந்தபின்னும் சாம்பலாய் நானிருப்பேனெனச் சொன்னதேன் சொல்லம்மா
காத்திரமில்லாதது என் காதலடி செல்லம்மா
நீ காலமெல்லாம் என் காலடியில் கிடப்பதேன் சொல்லம்மா....

கண்ணீர் மாத்திரம் நிறைந்த பாதையடி செல்லம்மா
அதில் தனந்தனியாய் உடன் துள்ளிவர துணிந்ததேன் சொல்லம்மா
வேதனை வேரென நீளும் வேளையடி செல்லம்மா
வேறென ஆகிடலாகாது வேண்டுமென வேண்டுவதேன் சொல்லம்மா
ஆண்டு பல இங்கு யாரும் ஆள்வதில்லை செல்லம்மா
ஆயினும் வேண்டும் உடன்வர வாழ்வெல்லாம் வரம் கேட்பதேன் சொல்லம்மா....

கையில் ஏதுமில்லை கானகன் செல்லம்மா
என் காதல் ஒன்றே போதுமென்று காதினில் சொல்வதேன் சொல்லம்மா
தேவை ஏதும் பூர்த்தியாகிடாது செல்லம்மா
அது ஏதும் தேவையில்லை சேவை செய்ய காத்திருப்பதேன் சொல்லம்மா
ஆசை யாவிலும் ஆடையில்லை அம்மணம் செல்லம்மா
பாசமதில் ஆலயம் கண்டேனென கை தொழுவதேன் சொல்லம்மா
நேசமது நிலைமாறும் பொருள் இல்லையடி செல்லம்மா
நின் நேயமதில் என் நெஞ்சிழந்ததேன் சொல்லம்மா...
எந்தன் செல்லம்மா ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக