சனி, 7 நவம்பர், 2015

இதுதான் சுதந்திரமா

இதுதான் சுதந்திரமா
என் இதயம் கலங்குதம்மா
நேர்மை எரியுதம்மா
என் நெஞ்சம் எரிமலை ஆகுதம்மா
பொல்லாதோர் நிறைந்த பூமியம்மா
போகும் வழியெங்கும் பேதமை பள்ளம் உள்ளதம்மா


இல்லார்க்குச் சட்டம் இரும்பானது
அதுவே செல்வம் உள்ளோர்க்குத் துரும்பானது
எல்லோருக்கும் பொதுவென்பது பொய்யானது
பொய்யர்க்கே சுழலும் பூமி மெய்யானது 


கற்றறிந்த கள்வர் கூட்டத்திலே கேட்டிட லாகுமோ நியாயத்தையே
கற்பிழந்த கயமை பார்வையிலே கண்டிட லாகுமோ கண்ணியத்தையே
வெறும் பேச்சுக்கள் மட்டுமே இங்கு தீர்வதில்லை பெண்ணடிமை
பெரும் மோகத்துலே சிறு பூக்களுக்கும் பாதுகாப்பில்லை 


ஆண்மை மூர்க்கத்திலே ஆதிக்க நோக்கத்திலே அறமிங்கே அழிகிறதே
அதிகார வர்க்கத்திலே
ஆணவ மலத்தினிலே
அஞ்சாமை அடங்காதே 

 
நரிகள் நடமாடும் நாடானது
குயில்கள் அழிந்த காடானது
அடிமைச் சங்கிலி படரும் கொடியானது
ஆலமர விழுதென சாதிகள் வேர் தாங்குது 


எங்கும் கொடுமை நாகமென படமாடுது
ஏனெனக் கேட்டிட நாக்குகள் நடுங்குது
கொன்று குவித்திடும் குணம் நாடாளுது - உண்மை
கொஞ்சமும் இல்லை இதை எப்படிச் சுதந்திர நாடென்பது ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக