சனி, 7 நவம்பர், 2015

கருவறை கோலமிது

கருவறையில் துவங்கிய
கண்விழிக்கையில் காண்பதில்லை நல் ஞானமது
நாளும் வளர்வதில் வேறில்லை பிரிவில்லாது
கருத்தது புரிகையில் கவலையும் கை ரேகையாகுது
பருவம் பூக்கையில் காதல் தேன் சிந்துது
அது கைகூடாது என்கையில் தேனீயாய் கொட்டுது
வருத்தம் மறைந்தே புது மண வாசல் திறக்குது
காமம் கருத்தறித்து கடன்காரனாய் மறு ஜென்மம் ஆகுது
பொருத்தம் இல்லையோ என்று மனமது புலம்புது
எடுத்ததற்கு எல்லாம் கோபம் பொங்குது
குடும்ப பாரம் சுமக்கையில் கழுதையே மேல் எனத் தோனுது
அடுத்தவன் சிரிப்பினில் நம் அடி வயிறு எரியுது
எண்ணியது ஈடேற மனம் என்னென்னமோ நினைக்குது
விதைத்தவன் இருக்கையில் அதை சொந்தமென
ஆக்கிக் கொள்ள வெறுமன வந்தவன் நெஞ்சமது துடிக்குது
முதலில் அடிக் கரும்பென யாவும் இனிக்குது
அதுவே கடந்த பின் முற்றிய வேப்பிலையாய் கசக்குது
நல்லவன் என்று தனைக் காட்டிட
நாளெல்லாம் பொதுவினில் தலை நடிக்குது
யாவரையும் நம்பிட முடியாது நயவஞ்சகரோ என்று
அஞ்சியே நாவது பல சொல் மறைக்குது
கஞ்சிக்கு வழியில்லாது நிலை போயினும்
பிறரைக் அண்டியே சுக வாழ்வது தேடுது
மண்டியிட்டு எவர் முன் நிற்பதில்லை எனும்
மாய வார்த்தையில் மர்மத் தேவை இருக்குது
அள்ளி வீசும் காசுகளுக்கே எந்நாளும் கூட்டம் கூடுது
அது அழகென்றும், அழுகலென்றும் வசனம் பேசுது
தேவைக்கு யாவரையும் பழகிடுதல் முறையாகுது
தேவனுக்கும் வல்லோன் வருகையே பெருமையாகுது
கெட்டென நல்லென மொத்தமும் அறிந்தவன் நானெனும்
மெத்தன நடையது சக்தியின் வாள் உடையது
கற்றென அனைத்தும் கரைத்தே குடித்தேன்
என்முன்னே சற்றும் நிற்க எவர்க்கும் தகுதி ஆகாது
முற்றும் உணர்ந்த முனிவரெல்லாம்
பற்று துறப்பதொன்றே கற்றுணர்ந்தது - அறியாது
துன்பம் பட்டும் உணரா பக்குவமற்ற நிலையது
கெட்டே போன பின் கேள்விக் குறியாய் தவிக்குது
விட்டே கொடுக்க இயலாது
விலகிச்செல் உலகம் என்னது
எதையும் தொட்டே பார்க்க இளமை துள்ளுது
ஏமாற்றம் அடைந்த பின் விதி என விம்முது
பட்டென மின்னிடும் தேயா வாழ்வது
மேனி பட்டே சுருங்கி வயதாகிடும் பொழுது
விடும் மூச்சும் மலையேறும் பாரமாகிடுதல் தாங்கிடாது
உயிர் விட்டே போகும் நாளை எண்ணிடும் காலமது
அட அற்பனே நீ யாராகினும் வெறு சடலம் அப்போது ~~~

கோலமிது

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக