சனி, 7 நவம்பர், 2015

நல் ஞானம் கொடுத்தாய்

நல் ஞானம் கொடுத்தாய்
அதில் மானம் வைத்தாய்
சொல் ஈரம் நனைத்தாய்
பகை நடுங்கும் வீரம் விதைத்தாய்
ஏதுமில்லையென யாவும் அளித்தாய்
அது என்னது என்போரை தூற்றிப் பழித்தாய்
காயும் நிலவுடன் பெருங் காதல் வைத்தாய்
ஓடி ஆடும் கடலிடம் உழைப்பை உடுத்தாய்
மேகம் தொடும் மலையானபோதும் மேனியில் பச்சை வளர்த்தாய்
மேன்மை பல கண்டதாயினும் எங்கள் ஏழ்மையில் சிரித்தாய்
பாயும் நதி தந்து அதிலெதிரே மோதும் கயலானாய்
பாவையர் புருவமது விழியுமதுயென்று புரியவைத்தாய்
பேதமையற்று ஓர் வழி தன்னில் பிறப்பு வைத்தாய்
பின் ஏனதனில் பிரிவுவைத்து பித்தர்களாய் உலவ வைத்தாய்
பெண் மானம் காத்திடவே கரமதனில் பலம் வைத்தாய்
அதுவே காட்டு நரியென ரத்தம் ருசிக்க ஏன் காமம் கொடுத்தாய்
பார்த்து ரசிக்கவே யிங்கு பலயிருக்க பாவம் தனை புகுத்தாய்
நின் நோக்கத்திற்கு ஏற்றதாய் ஏன் ஒவ்வொன்றையும் படைத்தாய்
நல் ஆக்கமது மண்ணில் நிகழ்ந்திட தின ஊக்கமது தந்தாய்
பொய் அக்கறை காட்டிடாது மெய்யென தேன் மாரி பொழிந்தாய்
என் உள்ளிருந்து உலகதனை எண்ணி எண்ணி நொந்தாய்
அதற்கு உண்மை மறந்ததே இவ்வுலகம் என்றாய்
கூவும் குலாவும் இனங்களை மெல்லக் கொன்றாய்
அட கூறுகெட்டவனே நாளை கூடுவார் யாருமின்றி அழிவாய் என்றாய்
நாடும் நாமும் செழித்திட நல்லவை மட்டும் செய்வாய் என்றாய்
அதை நாடாது நன்றி மறந்திட்டு நடந்தால் நரகம்தான் என்றாய்
கூடாது கூடாது புதுமை பெருங்குற்றமாகும் மறப்பது நம் பழமை என்றாய்
மாறாது மாறாது வேளாண் வயல் வரப்பு மேன்மையென நின்றாய்
காணாதுபோன கூட்டுக் குடும்பத்தோடு எங்கள் உள்ளக் களியாட்டம் தொலைந்தாய்
ஆறாது ஓடிய இன்பபாலினிலே விசம் தனை கலந்தாய்
சுடர் ஒளி காற்றினிலும் குந்தகம் விளைய துணிந்தாய்
இந்நிலை நீண்டிட இனியது மாய்ந்திட நின்றதை நானும் பார்ப்பேனோ
தீமை கொன்றதனை நன்மை செய்வே அன்றி நான் விடுவேனோ~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக