வெள்ளி, 22 ஜூலை, 2016

என்ன சொல்ல

ஐந்தாண்டுக்கொருமுறை செய்யப்படும் அடிமைச் சங்கிலி விதவிதமாக சந்தையில் விற்க அதில் சிறந்ததை கைகளில் பூணுகிறோம்...
சில்லரைக்கும் சினிமா தனத்திற்கும் பதிவிட்ட நகங்களின் ரேகைகளில் அறியா"மை" கடலென கொட்டியிருக்க ஆளுமை கை கொட்டி நகைக்கிறது...

எல்லாம் இலவசமாகிய பின் தின்னுதல் கழித்தல் தவிற உனக்கென்ன இங்கொரு வேளை எம் அரமணையின் வாயிலில் கையேந்தி நின்றிரு அமரும் உரிமை எங்களுக்குரியது...

எச்சில் சோற்றுக்கலையும் நாயாகிய பின் கிடைக்கும் எலும்பு துண்டுகளுக்கு நிகழும் குதறல்களில் நமக்கு நாமே சட்டை கிழிக்க பழகி பின் கொல்வோம்...

அத்தனை வளைதலையும் மண் முன் செய்திருந்தால் நிமிர்ந்திருக்கலாம் சுய செருக்காய் என்ன செய்ய சர்வாதிகள் அடை காக்க இடும் மல முட்டைகளாகிறோம்
பொறிக்கும் நம் குஞ்சுகளுக்கு புத்தியிருப்பதில்லை...


மதுவும் மாங்கல்யமும் சதுரங்கமாடும் அரசியல் கட்டங்களில் இரு புறமும் காயுருட்டுதல் சகுனி ஆகையில் பாஞ்சாலிகளின் துயிலுரிதலுக்கு கண்ணனற்ற சபையினில் மேஜை தட்டி எழும் ஒலி காது பிளக்கிறது...

காக்கியும் கறுப்பு அங்கியும் ஆள்வோரை பல்லக்கு சுமக்கும் ஆனை ஆகிய பின் ஆணைகளை ஏற்று தும்பிக்கை ஏந்தி ஆசிர்வதிக்கிறது தன் அகன்ற பாதங்களில் சினஞ் சிறு எறும்புகளை மிதித்தவாறு...

சட்டத்தின் சட்டை கழற்றி உற்று நோக்கினால் அதில் ஓட்டைகள் மட்டுமல்ல பல கோடி அணைகட்டுகள் பொத்தலாகியிருப்பது கண்களில் கசிகிறது தராசு தலைகீழாய்...

இனி
என்ன சொல்ல
ஏட்டிலுள்ள யாவையும் எரித்து
அதன் மேல் உலகப் பானை அமைத்து
பொய்மை எனும் சாராயம் காய்த்து
யாவரும் வயிறு முட்டக் குடித்து
போதை தெளிய தெளிய பருகிடும் இந்நாட்டின் பெருங்குடிமகனாவோம்~~~- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக