வெள்ளி, 22 ஜூலை, 2016

புது சக்தி

பகலவனொளி புலமதில் பாய்ந்திட
சோர்வு நீங்கியே நற்சுடர் விழிபடர
உள்ளத்தில் பலமது பாய்ந்து பெருகுதே

கொஞ்சம் குருவிகளும் கொஞ்சும் கிளிகளும் நெஞ்சுறக்கம் தட்டியெழுப்பி சின்னஞ் சிறகதனை நீட்டியே விண்ணில் பறக்க ஊக்கம் காட்டுதே
கூ கூ யெனக் கூவும் குயிலும்
கிரீச் கிரீச்சென பாடும் பறவையும்
கா கா வென கரையும் காகமும் அதிகாலையினை எழுப்பும் அற்புத மிங்குக் கண்டீரோ

தாவிக்குதிக்கும் பூனையும்
நா நீவிக் குரைக்கும் நாயும்
கூவி அழைக்கும் சேவலையும்
கூர்ந்து கவனித்ததுண்டோ
அது சோர்ந்திங்கு பொழுது விடிந்ததுண்டோ

தென்றல் தாளத்திற்கொன்று ஆடும் மரங்களில் நின்று
துள்ளி ஓடும் அணில் அதனினும் அழகுண்டு
பள்ளி விரும்பிடா நதி கண்டு அதில் படுத்துறங்கா மீன் செதில் நீந்துதல் அற்புதமாம்

மண்ணில் இதுபோல் மலர்வது பலவுண்டு
நம்மில் அதனை வுணர்தலில் தான் திறமுண்டு
இதை எண்ணி நிதமும் கண் விழித்தால் உடலெங்கிலும் பொங்கும் புது சக்தியாம்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக