வெள்ளி, 22 ஜூலை, 2016

கண்ணா ~~~

வீணாய் பொழுதது கழியுது
மீனாய் விழியது தேடுது
வேம்பாய் வார்த்தைகளானது
வீம்பாய் காக்கவைத்தலாகாது
நேராய் இங்கே வாராய் கண்ணா ;


கடும் நோய்விடக் காதல் கொடியது
அதைவிடக் காத்திருத்தல் கடினமது
பெருந்துன்பம் தாராது பொறுமை போதாது
வெறுமை முழுவதுவுண்டுவிடப் பாராது
எங்கேப் போயொழிந்தாய் கண்ணா ;


பாவை உடலின்று பனையென மெலியுது
பாம்பினது தலைமீது நடமாடும் பாதவடிவது
பூவெல்லாம் மயக்கும் புல்லாங்குழலிசையது
பூலோகம் ஓரடி அளந்த புன்னகை முகமது
காணாது வாடினேன் வந்தணைக் கண்ணா ;


கூடிய நினைவுகள் ஒன்றுகூடியே நகைக்குது
கைகோர்த்து ஆடிய மனதின்று நீரற்ற ஆறானது
பேடிருளில் எனை பேதமைச் செய்யலாகாது
பெரும் காமத் தீ தள்ளி; நீ தள்ளி நிற்க நியாயமாகது
பேரன்புடையோனே அழைக்கின்றேன் வா கண்ணா ;


கோவமடையும் வரை வேடிக்கைப் பார்க்காது
கொந்தளித்தே குறை கூறி அழவைத்தல் ஆகாது
மாயங்கள் புரிந்தென்னை சோதனை செய்திடாது
மார்மீது சாய்த்து மனச்சாந்தி தந்திடவே
கார் மேகமென விரைந்தே வந்திடுவாய் கண்ணா ~~~

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக