வெள்ளி, 22 ஜூலை, 2016

விதி

விதியென்று எதை நான் சொல்ல
விரும்பா வெறுமேனி வளர்த்தாய்
அவ்விளையாட்டு போதாதென்று அதற்குள் ஆசை கொடுத்தாய்
உறவென்று நட்புலகென்று நலமாய் அளித்தாய்
அஃதும் ஓர்நாள் நஞ்சென்று நெஞ்சதனை புலம்பவைத்தாய்
கரும்பாய் இனிக்கும் பருவமதனில் உண்மை காதல் விதைத்தாய்
அது கை கூடாது கருணையற்று பிரித்தே ரசித்தாய்
காலம் கடக்க தர்மம் இதுவென கல்யாணம் முடித்தாய்
காமம் உடைபட கர்மம் எனை மீண்டும் குழந்தையாய் படைத்தாய்
இது போதாது போதாதென பொருள் தேடி முதுகெலும்பு வளைத்தாய்
பொய்யுரைக்க சுயநலமிக்க புகழ் வேண்டி உறவாடி கெடுத்தாய்
மெய்யற்றது இளமை என்பதறி யாததாய் அவ்வழி முடித்தாய்
இறுதியில் இவ்வுடல் பலவீனமாக இருப்போருக்கு எனை பாரமாக்கி சிரித்தாய்
இறைவா...
இதுவே எம் வாழ்வென்று பிறர்போல் மண் மூடி தீ தின்றிடாது
என்றும் அழியா வடிவான எழுத்தாய் நிற்க அருள்விப்பாய்~~~


- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக