வெள்ளி, 22 ஜூலை, 2016

மாதவம் செய்தேன்

மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்
சுடராதவன் போல் அருகினில் வந்தான்
இரு தோளில் அள்ளி மலர் மாலையாய் சூடிக் கொண்டான்....


மின்னிடும் மார்பில்
பொன்னென சரிந்தேன்
அதை எண்ணி எண்ணி
பெண்மை அணிந்தேன்
இரு விழி கண்டு
இருதயம் தந்தேன்
இனி அவனில்லை யென்றால்
என்னுயி ரில்லை யென்றேன்....


என் முகம் நோக்கி
வரம் வேண்டிடக் கேட்பான்
ஏதெனக் கொடுப்பாய் என்றால்
என்னுயிர் தருவேனென்பான்
தன் இன்முகம் காட்டி
இன்னும் கேள் என்பான்
இதுவே தக்க தருணமென
முத்தங்கள் தருவான்....


வெட்கம் பூசிய இதழில்
புல்லாங்குழல் இசைப்பான்
பின்னிடை பற்றியே
தன்னுடல் சிலிர்ப்பான்
பின் மடி சாய்ந்தே
நிலவினை பிடிப்பான்
கண்கள் சொருக காதல் செய்வான்
கள்வன் அவனே இதைக் கனவென நகைப்பான்....


மாதவம் செய்தேன்
மாதவனைக் கண்டேன்
யாதென அறியா
யாதவன் மீதாசை கொண்டேன்~~~
- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக