வெள்ளி, 22 ஜூலை, 2016

சுகம் ... சுகம் ~~~

சுட்டெரிக்கும் மணலானது உதிர்ந்திருக்கும் மலை முகட்டின் குறு முகத்தில் ஒருங்கற்ற வடிவில் அனல் அமர்ந்திருக்கும் அழகாகும்

நகரும் மரயிலை நிழல் திசை மீதுயரும் வெம்மைக் காற்றின் நுனி வளரும் உஷ்ணத்தில் உயிர் துறக்கும் சருகின் சப்தம் ஏகாந்தம்

சுருக்கென வரி பிளந்த மேனியின் நிறம் வறட்சியின் ஓவியமாகையில் யாவும் துறந்து தூரிகையாகி வரைவதை வானம் அறியும்

பெரும் பாறை நாடியெங்கும் வளரும் வெண் தாடியென நீளும் நீரதனை சவரம் செய்யும் கதிரவனின் ஒளியினில் பளபளக்கிறது பச்சையம்

வேர் உறிஞ்சும் ஈரத்தின் குடல் யாவிலும் நீராவியாகும் வெப்பச் சலனத்தின் வியர்வையில் பூக்கும் இதழ்களில் அரும்பும் தேன் சுடச் சுட

மேகம் உருகி வழிய காலம் கனியக் காத்திருக்கும் கை ரேகையென விரிந்திருக்கும் கிளையதனில் தவமிருக்கும் பறவைக் கூடு அழியா மின்னல் கோடு

ஆவியாகும் குளிரற்ற அறை சூழும் சுவரெங்கும் எரியும் நெருப்புக் காடாகையில் தணல் சிவப்பிழந்து கருப்பென வழிகிறது சித்திரை உடலெங்கும்
சுகம் ... சுகம் ~~~

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக