வெள்ளி, 22 ஜூலை, 2016

ஓம்... ஓம்... ஓம்...

ள்ளத்தில் உறுதி கொள்
உடைந்தால் உயிரைக் கொல்
வெள்ளமென கோபம் பொங்கிடின்
பள்ளமென பொறுமை கொள் ;


தெள்ளத் தெளிவுடன்
வார்த்தை சொல்
கள்ளமற்ற நெஞ்சத்துடன்
கனிவோடு கேள் ;


நல்லனவற்றுக்கு நயமுடன்
கொடு தோள்
எதிர் எவரெனினும் தயங்கிடாது
மார் நிமிர்த்தி நில் ;


யாவிலும் பற்றற்று
இன்புற்று ஆள்
அன்பது வைத்தாயின்
அடிமையாகாது மீள் ;

கொடுமை காண்பின்
உயர்த்திடு வாள்
வறுமை உடுப்பினும்
நெறி மாறாது வாழ் ;


சுதந்திரக் காற்றாய்
நாளெல்லாம் சுழல்
சுவர் மோதும் பந்தாய்
வேண்டும் மீண்டும் எழல் ;


மரமென உருமாறி
நித்தமும் கொடு நிழல்
மனமது மலிவாகாது
சூட்சமம் அவிழ் ;


முயலுதல் முடங்காது
தொடர்ந்திடும் அலை கடல்
அதுபோல் அடங்கிடாது
அனுதினமும் வீழ் ;


எது நேர்வினும் வேண்டி
நிகழ்ந்திடாது பிறர் தொழல்
வையத்தில் அழியா அழகது
இயற்கையின் எழில் ;


யாவுமது விலகினும்
துணையிருக்கும் தமிழ்
சிதை மூட்டி சாம்பலாகினும்
சாகாது சிவப்பொருள் ;


ஓம்... ஓம்... ஓம்...

- வித்யாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக